வழக்கு எண் 18 /9

UTV motion pictures மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதேர்ஸ் கூட்டுத்தயாரிப்பில் காதல்,கல்லூரி புகழ் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் “நல்ல திரைப்படம்” என்ற சான்றிதழ் பல திரையுலக பிரமுகர்களால் வழங்கப்பட்டு,2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட இந்தப்படம் பாரிய இழுபறிகளின் பின் ஒரு வழியாக 2012 இல் வெளியாகி இருக்கிறது.படம் வெளியாகு முன்னரே எதிர்பார்ப்பினை கூட்டும் விதமாக பல தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.குறிப்பாக படம் செய்தியாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கு முதலில் திரையிட்டு காட்டப்பட்டதாகவும் அதன் போது செய்தியாளர்களின் பாராட்டு மழையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நனைந்ததாகவும் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் பாலாஜி சக்திவேல் காலில் விழவேண்டும் என்று கூறியதாகவும்,இயக்குனர் லிங்குசாமி அதிக தடவைகள் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை பெறுவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தன.நேற்று விடுமுறை தினம் அத்துடன் மிக அபூர்வமாக பிரபலங்கள் நடிக்காத ஒரு திரைப்படம் கொன்கோர்ட் திரையில் வெளியாகி இருந்தது.காரமான மசாலா கம்மேர்சியல் குப்பைகள் என்று எங்கள் ரசனைகளுக்கு ஏற்றவாறு படங்களை வெளியிட்டு பலதரப்பட்ட விசில் சத்தங்களை கேட்டு பிரபலங்கள் பலரின் களங்கள் பல கண்டு இன்று இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கும் கொன்கோர்ட் திரையரங்கினை நினைத்து வருத்தமாக இருந்தாலும் இனி இவ்வாறான நல்ல திரைப்படங்கள் திரையில் காண ஒரு வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி….!!!

வழக்கம் போல தரமான தமிழ் சினிமாவினை வரவேற்போர் சங்கம் சார்பாக வழக்கு எண்ணை வரவேற்று விடுகிறேன்.தரமான ஒரு யதார்த்த சினிமா என்று ஷீல்ட் குத்தி விடுகிறேன்.ஆனாலும் படத்தின் திரைக்கதை என்னுடைய பார்வையில் எனது எதிர்ப்பார்ப்பினை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே ஒரு கசப்பான உண்மை.திரைக்கதையில் பல இடங்களிலும் வசந்த பாலன் அவர்கள் இயக்கிய அங்காடித்தெரு படத்தின் அப்பட்டமான சாயல் ஒரு விதமான உறுத்தலாக இருந்தது.இன்னும் கொஞ்சம் அதிகமாக இந்த திரைபடத்திலிருந்து எதிர்பார்த்தேன் என்று சொல்லலாம்.முதலில் திரைக்கதையினை சற்று விரிவாக பார்த்து விட்டு விமர்சனத்திற்கு வந்து விடலாம்.”வழக்கு எண்” படத்தின் பெயருக்கு ஏற்றவாறே திரைப்படம் ஒரு வழக்கு பற்றிய விசாரனையிலிருந்து ஆரம்பமாகிறது.ஒரு பெண் உயிருக்கு போராடியவாறு வைத்தியசாலையில் இருக்கிறார்.அவரின் அந்த நிலைமைக்கு காரணமானவர்கள் பற்றி போலீஸ் துப்பு துலக்குகிறது.அந்த விசாரணை கதையாக விரிகிறது.கதையின் ஆரம்பத்தில் நாயகன் சந்தேகத்தின் பெயரில் போலீஸ் நிலையம் அழைத்து வரப்படுகிறார்.அவரிடம் நடக்கும் விசாரணையில் தன் சொந்தக்கதையினை சொல்லுகிறார்.


வறுமையின் காரணமாக வட நாட்டில் வடை மற்றும் முறுக்கு தயாரிக்கும் கம்பனிக்கு வேலைக்கு செல்கிறார்.அங்கு முதலாளியால் கொடுமைப்படுத்தப்படுகிறார்.தனது தாய்,தந்தை இறந்தது கூட தெரியாமல் அங்கு அவருக்கு மறைக்கபடுகிறது.அது ஒரு நண்பன் மூலம் தெரிய வரும் போது அங்கிருந்து தப்பி வேறு இடம் வருகிறார்.வீதியோரத்தில் விழுந்து கிடக்கும் அவருக்கு விலைமாது ஒருவர் உதவுகிறார்.வீதியோர நடமாடும் இட்லி கடையில் வேலையும் பெற்றுக்கொடுக்கிறார்.அந்தக்கடையில் இன்னுமொரு சிறுவன் வேலைக்கு வர நாயகனுக்கு புதிதாய் நட்பு என்னும் உறவு கிடைக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருக்க கதை நகர்ந்து காதல் அத்தியாயம் வருகிறது.அந்த வீதி வழியே வழமையாக சென்று வரும் வீடுகளில் வேலைகாரியாக வேலை செய்யும் பெண் மீது மனிதாபிமான உணர்வினை பார்த்து நாயகனுக்கு காதல் வருகிறது.காதலியின் படத்தினை கூடவே வைத்திருக்கிறார். காதலை சொல்ல முன்னரே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்படுகிறார்.நாயகனின் விசாரணை முடிய அந்த வழக்கு தொடர்பாக இன்னுமொரு பையனை விசாரிக்க வேண்டுமென்று வேறொரு பெண் காவல் நிலையம் வருகிறாள்.படம் தொடங்கி சரியாக 45 நிமிடத்தில் இடைவேளை வருகிறது.

முதல் பாதி முழுவது சோகம் அப்பியிருந்தாலும் நாயகன் நண்பனுடன் வரும் காட்சிகள்,நாயகியின் தாயாருடன் சண்டை,நாயகியுடன் காதல் கலகலப்பாய் இருக்கிறது.புது முகங்கள் என்பதையும் தாண்டி அனைத்து பாத்திரங்களும் ரசிக்ககூடியதாக தங்கள் பணியினை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.குறிப்பாக விலைமாது,இட்லி கடைக்காரர், நாயகியின் தாயார் போன்ற பாத்திரத்தெரிவுகள் சூப்பர்.எதையும் திணிக்காமல் கதையுடன் ஒட்டியதாக கதாபாத்திரங்களை வாழ வைத்தமைக்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ்.எனினும் கதையின் ஆரம்பத்தில் கிராமம், வடநாடு அங்காடித்தெருவில் கிராமம்-ரங்கநாதன் தெருவினை நினைவு படுத்திய போலவே ஒரு பீலிங்.அதே போல நாயகனுடைய நண்பன் அங்காடித்தெரு பாண்டியை போலவே ஒரு செதுக்கல்.நண்பனுடைய நடிப்பு ஆசையை பூர்த்தி செய்ய நினைக்கும் நாயகன் நிறைய பார்த்தாச்சு.புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாமே…?அனைத்தையும் தாண்டி எனக்குள் பிரமிப்பினை ஏற்படுத்தியது கதையின் நாயகனின் வெகுளியான நடிப்பு.படத்துடன் ஒன்றி இருந்து பார்க்க வைத்து விடுகிறார்.எனது பார்வையில் நாயகன் நடிப்பில் சொல்ல குறை எதுவுமில்லை.நாயகிக்கு நடிக்க படத்தில் எதுவுமில்லை.அடிக்கடி வீதி வீதியாக நடந்து கொண்டே இருக்கிறார்.

முதல் பாதியில் வறுமை,கிராமம்,சேரி என்று படம் பிடித்துவிட்டு இரண்டாவது பாதியில் சற்று வித்தியாசமான முயற்சியாக நகரத்து பணக்கார முகத்தையும் நாகரிக காதல்,டீன்ஏஜ் குழப்பங்கள்,செல்போன்,ஆபாச வீடியோ எண்டு திரைக்கதையின் பாதையினை மாத்துகிறார்.இடைவேளையின் பின்பு நாயகி வேலை செய்யும் வீட்டிலிருந்து கதை ஆரம்பமாகிறது.கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில் பாடசாலை முடிந்து வரும் அவர்களின் மகளை பார்க்கவும் வீட்டுவேலைக்காகவும் நாயகி அங்கு செல்கிறார்.அந்த வீட்டுக்காரர்களின் மகளாக பெங்களூரு தக்காளி ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார்.அந்தத்தக்காளி காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குவது போல கதை பிளஷ்பக் பாணியில் சொல்லப்படும். அந்த பெண்ணுக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” நாடகத்தில் நடித்த ஒரு பையனுக்குமிடையில் நடக்கும் கதை தான் இரண்டாம் பகுதியின் பெரும்பாலான காட்சிகள்.பெரிய பணக்கார பையனான அவன் செல்போன்,கார் போன்றவற்றை காட்டி மயக்கி பெங்களூரு தக்காளியை மடக்கி அவளின் அந்தரங்கத்தை படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்கிறான்.அது அவளுக்கு தெரிய வரும் போது அவனிடமிருந்து விலகி ஓடுகிறாள்.அந்த விரக்தியில் அசிட் போன்ற ஒரு வகை திராவகத்தை பெங்களூரு தக்காளியென நினைத்து அங்கு வேலை செய்யும் நாயகி முகத்தில் ஊற்றி விடுகிறான்.அந்த விபத்தினால் வைத்தியசாலையில் நாயகி அனுமதிக்கப்படுகிறார்.பிளஷ்பக் முடிந்து நிகழ்காலத்துக்கு கதை வருகிறது. போலீஸ் குற்றவாளி யார் என்ற முடிவுக்கு வருகிறது.எனினும் போலீஸ் அதிகாரி,அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் நாயகன் தொடர்ந்து காவல் நிலையத்தில் கைதியாகவே வைத்திருக்கப்படுகிறார்.அங்கு அவரின் பழைய இட்லி கடை நண்பன் வந்து பார்க்கிறார்.தொடர்ந்தும் சிறையில் இருப்பதற்கான காரணத்தை நாயகன் அவரிடம் சொல்கிறார்.இதன் பின்னர் பல திருப்பங்களை வழக்கு எண் சந்திக்கிறது.அதாவது கிளைமாக்ஸ் நோக்கி கதை நகர்கிறது.நல்லவனாக நடித்து நயவஞ்சகனாகிய போலீஸ் அதிகாரி எவ்வாறு பழிவாங்கப்படுகிறார்,பழிவாங்கியது யார்?நாயகனின் காதல் ஜெயித்ததா…?முகம் விகாரமாகிய காதலியின் நிலை என்ன..? போன்ற முடிச்சுகளை இறுதியில் அவிழ்க்கும் போது கண்ணில் நீர் முட்டுகிறது.


என்னையறியாமல் படத்துடன் ஒன்றியிருந்து படம் பார்த்த உணர்வு தியேட்டர் வாயிலால் வெளிய வரும் போது மனதில் இருந்த பாரத்தில் உணர முடிந்தது. ஆழமான கதையினை கிராமம்,வறுமை-நகரம்,பணம் என்ற இரண்டு வித்தியாசமான போக்குகளில் கொண்டு வந்து கிளைமாக்ஸ் காட்சிகளில் கச்சிதமாய் பொருத்தி இருப்பார்.எனினும் இரண்டு முழுமையாக வித்தியாசமான கதைக்களங்களை இடைவேளையின் முன்னும் பின்னும் பார்க்கும் சற்று நெருடலாக இருந்தது.சில காட்சிகள் திணித்திருப்பது போல ஒரு உணர்வு.எனினும் கிளைமாக்ஸ் காட்சிகள் வரும் போது கதை பொருந்தி விடுகிறது.பின்னணி இசையினை என்னால்பெரிதாக ரசிக்க முடியவில்லை.கதையோடு ஒன்றிய பாடல்கள் திரைக்கதையினை உயிரோட்டமாக நகர்த்திச்செல்ல உதவுகின்றன. முழுமையாக ஒரு பாடல் மற்றுமொரு சிறிய துண்டுப்பாடல் மட்டுமே மொத்தமாய் உள்ள பாடல்கள். “வானத்தையே எட்டிப்பிடிப்பேன் பூமியையே சுத்தி வருவேன்….” அருமையான வரிகள்.ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்-குறை சொல்ல முடியாத ஒளிப்பதிவு என்றாலும் கிராம காட்சிகள் இன்னும் மெருகேற்றி எடுத்திருக்கலாம். எடிட்டிங் கோபி கிருஷ்ணா-இதற்கு முன் இவர் பெயர் கேள்விப்பட்டதில்லை இருப்பினும் மோசமாக எதுவும் வெட்டுப்படவில்லை. இறுதிக்காட்சியில் நாயகி காவல்த்துறையால் கடுமையாக தாக்குப்படுவார்.அதன் போது ஒளிப்பதிவு,எடிட்டிங் இரண்டுமே திருப்தியாக இல்லை.

இயக்குனரிடம் சில கேள்விகள்..!

கிராம வறுமையால் நகருக்கு வேலைக்கு வரும் சிறுவர்கள்..,நாயகன்,நாயகி காவல்துறையிடம் அடிபடுவது.., அடிமைத்தனம் நடக்கும் தொழிற்சாலை..,விகாரமாகும் நாயகிக்காக காத்திருக்கும் நாயகன்..இந்த காட்சிகளெல்லாம் வசந்தபாலன் அங்காடித்தெருவில் தந்து விட்டாரே…?சற்று வித்தியாசமாக சிந்தித்திருக்கலாம். நான்கு வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து எடுத்த படம் என்பதால் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறீர்களா..?

படத்தில் சில இடங்களில் கெட்ட மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள்…இயக்குனர் பாலா காட்டிய வழி என்கிறீர்களா..?காட்சிக்கு அவசியம் என்றாலும் தவிர்த்திருக்கலாம்.பெண்கள் நிச்சயம் முகம் சுளித்திருப்பார்கள்.
வணிக நோக்கமில்லாமல் பாடல்களின் திணிப்பு இல்லாமல் தைரியமாக இத்தகைய ஒரு படத்தை தந்த இயக்குனரை இறுதியாக கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.மசாலா அல்லாத யதார்த்த சினிமாவினை தொடர்ந்து எடுக்க வேண்டும்.நீங்கள் எடுக்கும் சினிமா காலம் முழுதும் உங்கள் பெயர் சொல்லி நிலைத்து நிற்க வேண்டும்..

வழக்கு எண்-வழக்கமான ஒன்றல்ல..

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>