இசையால் வருடும் இசைஞானி…..பாகம்-02
-தொடர் பதிவு-
நீண்ட காலம் நிலைத்து நின்று காலத்தை இசையால் வென்று அன்னக்கிளியில் ஆரம்பித்து நீ தானே என் பொன் வசந்தம்(இசை வெகுவிரைவில்..) வரைக்கும் அன்றிலிருந்து இன்று வரை அனைத்து தரப்பு இசை ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் பாடல்களுக்கு இசை வழங்கிய இசைஞானியின் அநேக பாடல்கள் என்னை கவந்தவை.இருப்பினும் நான் மீண்டும் மீண்டும் ரசித்து பாடலோடு ஒட்டி உறவாடி உருகிய ஒரு சில அற்புதமான பாடல்களின் தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
பாடல்:துள்ளித்திரிந்ததொரு காலம்….
படம்:என்றும் அன்புடன்
நடிகர்கள்:முரளி,சித்தாரா,ஹீரா,மனோரமா
இசை:இசைஞானி இளையராஜா
பாடியவர்:S.P.பாலசுப்ரமணியம்
அதிக தடவை மெய்மறந்து பருகிய இசைஞானியின் இசை என்ற பெருமையை இந்தப்பாடலுக்கு வழங்கலாம்.மனம் அமைதியின்றி தவிக்கும் நேரங்களில் இப்பாடலை கேட்டுக்கொண்டே தூங்கும் போது சொல்லில் வடிக்க முடியாத ஒரு தனி சுகம்.அமைதியான இனிமையான இசை,வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை அழகாகச்சொல்லும் ஆழமான வரிகள்..
“நட்பின் அரட்டைகள் சில நாள் நம்பித்திரிந்ததும் பல நாள்…”
“துள்ளும் அலையென அலைந்தேன் நெஞ்சில் கனவினை சுமந்தேன்…
வாழ்க்கைப்பயணத்தை தொடர்ந்தேன் வானம் எல்லையென நடந்தேன்…..”
பாடலை கேட்டுக்கேட்டு பாடமாகிப்போன வரிகள்.இளம் பருவ வாழ்வின் உண்மையினை சொல்லும் வரிகளுக்கு இசைஞானி உயிர் கொடுக்கும் போது இரட்டிப்பு இனிமை.வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லை என்ற விளக்கம் பலருக்கு இருப்பதில்லை.குறிப்பாக நான் உட்பட இளம்பராயத்தினர் மத்தியில் வாழ்வின் போலித்தன்மையினை விளக்குவதற்கு இந்தப்பாடல் வரிகள் மிகப்பெரியபலம் இசைஞானி இசையில் இத்தகைய அற்புதமான வரிகள் இறைவன் கொடுத்த வரம்…
பாடல்:கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே….
படம்:புது புது அர்த்தங்கள்.
நடிகர்கள்:ரகுமான்,சித்தாரா,கீதா
இசை:இசைஞானி இளையராஜா
பாடியவர்:S.P.பாலசுப்ரமணியம்
1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த புது புது அர்த்தங்கள் திரைப்படம் இசைஞானி என்னும் இசையமைப்பாளருக்காக பெரு வெற்றியடைந்தது. நான் முதன் முதல் பார்த்த பாலச்சந்தர் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.இளையராஜா தமிழ் திரையிசை உலகின் உச்சத்தில் இருந்த காலத்தில் இசையமைத்த இந்தப்படத்தில் அநேக பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது. “கல்யாண மாலை…”,”கேளடி கண்மணி…”,”குருவாயூரப்பா…” போன்ற பாடல்கள் இன்று வரையில் பலாரால் முணுமுணுக்கப்படுகின்ற அளவுக்கு பிரபலமான பாடல்கள்.குறிப்பாக பாலா சாரின் கம்பீரமான குரல்-இசைஞானியின் இனிய இசை கூட்டணியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான ஏராளமான பாடல்களில் முதல் பத்தில் இந்த கல்யானமாலையும் இருக்கலாம்.எளிமையான இசையில் அழகிய நாதமாய் ஓங்கி ஒலிக்கும் வகையில் அமைதியான இசையினை வழங்கியிருப்பார் இசைஞானி.
பாடல் வரிகள் கவிஞர் வாலி அவர்களின் அற்புதமான வரிகள்.யாராலும் இலகுவில் விளங்கிக்கொள்ளகூடிய ஆழமான கருத்துள்ள வரிகள்.இத்தகைய பாடல்களுடன் ஒப்பிடும் பொது ஹரிஷ் ஜெயராஜ் பாடல்களை நினைத்து எரிச்சல் அடைவதுண்டு.தொன்னூறுகளில் எனது கிராமங்களில் நடக்கும் திருமண விழாக்களில் இந்தப்பாடல் பலத்த சத்தத்தில் மணமேடையை அலங்கரிக்க ஒரு போதும் தவறுவதில்லை.அத்தகைய அருமையான வரிகளை கவிஞர் வாலி எழுதியிருப்பார்.
“வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே……”
கேக்க கேக்க திகட்டாத அற்புதமான வரிகள்.அனைத்து செவிகளும் விரும்பும் வண்ணம் ரசிக்கும் வண்ணம் இந்த வரிகளை அனைத்து விதமான மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை இசைஞானியை மட்டுமே சாரும்…
பாடல்:வைகை நதி ஓரம் பொன் மாலை நேரம்…
படம்:ரிச்சா மாமா.
நடிகர்கள்:சத்தியராஜ்,குஷ்பு
இசை:இசைஞானி இளையராஜா
பாடியவர்:S.P.பாலசுப்ரமணியம்,s.ஜானகி
நடிகர் சத்யராஜ் நடித்து என்னை வெகுவாக கவர்ந்த சில படங்களில் “ரிச்சா மாமா”வும் ஒன்று.நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாகவும் குஷ்பு மற்றும் கௌதமி நாயகிகளாகவும் நடிக்க வாசு அவர்கள் இயக்கியிருப்பார்.அந்தக்குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி வந்த சத்யாராஜின் படங்கள் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பினை பெற்றிருந்தன.அதில் வாசு இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சத்யராஜிட்கு பெரிதும் பெயர் வாங்கித்தரும் படங்களாக அமைந்தன.குறிப்பாக வாத்தியார் வீட்டுப்பிள்ளை,நடிகன்,வால்ட்டர் வெற்றிவேல்,உடன் பிறப்பு போன்ற படங்கள் வாசு-சத்தியராஜ் கூட்டணியில் வெளி வந்து வெற்றி படங்களாயிருந்தன.இந்த கூட்டணியின் வெற்றிக்கு திரை மறைவில் இசை ஞானியின் பணி அளப்பெரியதாய் இருந்தது.வால்ட்டர் வெற்றிவேல் படத்தில் “மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா…” என்ற பாடல் இன்று வரையிலும் பலராலும் ரசிக்கப்படும்.அவ்வாறே ரிக்சா மாமா,உடன்பிறப்பு,நடிகன் படங்களிலும் பாடல்கள் படத்தின் வெற்றியினை தீர்மானித்திருந்தன.பாடல்கள் மூலம் ஒரு படம் வெற்றி பெறும் போது அப்படத்தினை Musical Hit என்று அழைப்பார்கள்.அந்த வகையான ஏராளமான படங்களை இசைஞானி வழங்கி இருக்கிறார்.வாசு-சத்யராஜ்-இசைஞானியின் வெற்றிக்கூட்டணியின் “ரிச்சா மாமா”வில் இந்தப்பாடல் என்னை வெகுவாக மெய்மறக்க வைத்திருந்தது.
தொடரும்…
1) துள்ளித்திரிந்ததொருகாலம் – எண்ணிலடங்கா தடவைகள் கேட்டிருப்பேன்; இளையராஜா தவிர்த்து எஸ்.பி.பி யின் குரலின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வரிகளும் (பிறை சூடன் or வாலி) அற்புதம்!!!
“கானல் நீரினில் சிலநாள்
கடல் நடுவிலும் சிலநாள்,
கன்னி மயக்கத்தில் திரு நாள்
கையில் குழந்தையும் அதனால்”
“வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்,
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்”
இவை எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!!! உணர்வுக்கு உயிர்கொடுக்கும் ராஜாவின் இசையில் இந்த வரிகளுக்கு என்ன ஒரு உணர்வுபூர்வமான இசை!!!
2) இளையராஜா & பாலச்சந்தர் இணைந்த இறுதித் திரைப்படம் இதுதான் என்று நினைக்கிறேன்!! (இந்த திரைப்படத்தின் ஏதோ ஒரு பிரச்சனையின் பின்னணியில்த்தான் ராஜாவை விடுத்து ‘ரோஜா’விற்கு ரகுமானை இசையமைப்பாளர் ஆக்கினார் தயாரிப்பாளர் பாலச்சந்தர்)
இந்த பாடலிலும் இசை தவிர்த்து எஸ்.பி.பி குரல் & வாலியின் வரிகள் மிகவும் பிடிக்கும்!!
“சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே”
எனக்காகவே எழுதிய வரிகள்போல இருக்கும்!!
3) சதியராஜ்சின் வெற்றிப்படங்கள் என நீங்கள் கொடுத்த லிஸ்டை ஒருமுறை மீள்பரிசோதனை செய்யவும் :p அதிலும் அந்த உடன்பிறப்பை (சத்யராஜ்சே கிண்டல் பண்ணிய திரைப்படம் அது!!)
) வால்டர் வெற்றிவேல் தவிர்த்து ஏனைய வாசு + சத்யராஜ் படங்கள் வெற்றிபெற்றதாக நான் அறியவில்லை, ரிக்ஷாமாமா உட்பட!! எனக்கு சத்யராஜ் பிடிக்காது என்பதால் நான் பொய் சொல்வதாக நீங்கள் எண்ணினால் எதற்கும் ஒருமுறை சரியா என செக் செய்துகொள்ளுங்கள்!!
அப்புறம் அந்தப்பாடல் சில தடவை கேட்டிருந்தாலும் எனக்கு ஏனோ பெரிதாக ஒட்டவில்லை!!! சத்யராஜ் நடிப்பில் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு, பூ விழி வாசலிலே போன்ற திரைப்பட பாடல்கள் இளையராஜா இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்!!!
வால்ட்டர் வெற்றிவேல்,நடிகன் ரெண்டும் வெற்றி எண்டு நினைக்கிறன்.உடன்பிறப்பு,ரிச்சா மாமா பற்றி சரியா தெரியேல அண்ணா.ரெண்டு படமும் பார்க்கும் போது பிடிச்சிருந்திச்சு.அதால அதையும் அந்த லிஸ்ட்ல சேர்த்திட்டன்.நீங்க அந்த படங்கள் வெளியான காலத்தில பாத்திருப்பீங்க.அது வெற்றியா தோல்வியா எண்டு தெரிஞ்சிருக்கும்.ரிச்சா மாமா வரும் போது எனக்கு நாலு வயசு.அதால எனக்கு சரியா தெரியேல.நெட்ல செக் பண்ணினன்.பெரிசா எதுவும் கிடைக்கல.அதால ஊகத்தை அடிப்படையா வைச்சு எழுதினன்.தப்பா இருந்தா மன்னிச்சு கொள்ளுங்க…:(
அடுத்தடுத்த பதிவுகள்ள சரியான தரவுகள் தெரியாத விடயங்களை இணைக்காம விடுறன்.இல்லாட்டி விசாரிச்சு செக் பண்ணிட்டு இணைக்கிறன்.நன்றிகள் அண்ணா…:):)
Good article machan . Early waiting for the Next part .
Thanx machi…Next part will come soon…:)